அறிமுகம்

ஆகமம் தமிழில் முதலில் எழுந்தது.

விந்த்யாத்ரே தட்சிணே தேசே.

சைவோற்பத்தி ப்ரகீர்த்திதஹ:

சிவேனே ஸ்தாபிதம் சைவம்

சைவேணே ஸ்தாபிதம் சிவம்

–  காரணாகமம்

இதன் பொருள் விந்திய மலைக்குத் தெற்கே சைவம் உற்பத்தி ஆகி புகழ் விரிந்தது.  எனவே சிவாகமங்கள் தமிழிலேதானே உருவாகியிருக்க வேண்டும்.

இதை இறையனார் களவியல் உரை கூறுகிறது,

தலைச்சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தார் அகத்தியனாரும், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றம் எறிந்த குமரவேளும், நிதியின் கிழவனும், முரஞ்சியூர் முடிநாகராயரும் என இத்தொடக்கத்தார் 549 பேர்.  அவர் சங்கம் இருந்து தமிழாய்ந்தது, கடல் கொள்ளப்பட்ட மதுரை.  அவர்க்கு நூல் அகத்தியம்.

மேலும் ஆதாரமாக நம்பி திருவிளையாடல் புராணம் கூறுவதைப் பார்க்க.

மூவர்க் கரியான் நிற்க

முத்தமிழ்த் தெய்வச் சங்கப்

பாவலர் வீற்றிருக்கும்

பாண்டிநன் னாடு போற்றி

அண்மையில் வாழ்ந்த ஞானியான வள்ளலாரும் திருமூலர் கருத்தை ஒட்டி தமிழ் சம்புபட்சத்து சதாசிவர்களின் பாஷை என்று கூறுகிறார்.

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து

பண்ணுறத் தெரிந்தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை

மண்ணிடைச் சிலஇலக்கண வரம்பிலா மொழிபோல்

எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ

என பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

 • வேதமொடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்’ என்கிறது திருமந்திரம்.
 • பெரியபுராணத்தில் அற்சனை பாட்டே ஆகும். ஆதலால் மண்மேல் நம்மை சொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயார் எனச் சேக்கிழார் சுந்தரரைப் பற்றி பாடுகிறார்.  இது இறைவன் சுந்தரரைத் திருமணத்தில் தடுத்தாட் கொண்டு தமிழால் பாடச் சொன்னது.
 • இதையே புறநானூறும் கூறுகிறது.

நன்றாய்ந்த நீணிமிர் சடை

முதுமுதல்வன் வாய் போகா

தொன்று புரிந்த ஈரிரண்டின்

ஆறுணர்ந்த ஒருமுது நூல்

ஆறங்கம் – இறைவனை அடைய உரிய வழி ஆறு என ஆகம நெறியைக் கூறுகிறது.

 • இறை போற்றிகளில் ஓம் என்று தொடங்கி போற்றி என்று முடியும்.
 • ஓங்காரத்தை முதலில் சொல்ல வேண்டும் என்பது ஆகம விதி. இது தமிழுக்கே உரியது. நெடுங்கணக்கில் குறில், நெடில் என இரண்டு பிரிவுகள் ஒ, ஓ உண்டு.  ஆனால் இதுவே வடமொழியில் பார்த்தால் ஓங்காரத்திற்கு நெடில் மட்டுமே ஓ மட்டுமே உண்டு.  அவர்களுடைய நெடுங்கணக்கில் குறில் இராது.  ஆக ஓங்காரத்திற்கு மூலம் தமிழே என்பது உறுதியாகிறது.  தமிழ் மூலத்தை அடையாளங் காட்டுகிறது.
 • போற்றி என்பது மந்திரச் சொல் ‘இ’ விகுதி மந்திர அமைப்பாகும். ‘நமக’ என்பது போற்றியைக் குறிக்காது. வணக்கம் என்பதாகும்.

அருளாளர்கள் பலரும் பல போற்றிகளை பாடி பரவியுள்ளார்கள்.

திருமூலர் அமரர், அசுரர், மனிதர் புனிதன் அடியை போற்றி செய்கிறார்கள் என ஒரு மந்திரத்தை கொடுக்கிறார்.

போற்றி என்பார் அமரர் புனிதன்அடி

போற்றி என்பார் அசுரர் புனிதன்அடி

போற்றி என்பார் மனிதர் புனிதன்அடி

போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே

மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தில் போற்றித் திருஅகவல் என்ற ஒரு நூலையே அமைத்துக் கொடுத்துள்ளார்.

11-ஆம் திருமுறையில் நக்கீர தேவ நாயனார் ‘போற்றித் திருக்கலிவெண்பா’ என்றே ஒரு நூலை பாடியுள்ளார்.

 • அருளாளர் பாடல்கள் அனைத்தும் தமிழ் மந்திர அமைப்பில் அமையப் பெற்றுள்ளதால் அது அதனுடைய வேலையை செய்யும்.
 • ‘க’ என்ற விகுதியில் முடிவன எல்லாம் வியங்கோள் வினைமுற்று. எல்லாம் நம் செயலை நடத்திக் கொடுக்கக் கூடியவை. ஏவலைச் செய்வன. இது சிவ எழுத்தாகும். ‘அ’ சிவ எழுத்தாகும்.
 • திருமூலர் ஒரு பாடலில் தமிழில் எண்ணிறந்த மந்திரங்கள் உண்டு என்றும் இன்னொரு பாடலில் 7000 உண்டு என்கிறார். தொல்காப்பியம் தமிழ் மந்திரத்திற்கு சூத்திரம் வரைந்து வைத்திருக்கின்றது. இது தொன்மையானது என்றும் கூறுகிறது.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளர்ந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப

இதற்கு உரை வரைந்த நச்சினார்க்கினியர் தமிழ் மந்திரம் தனித்தன்மை வாய்ந்தது என்கிறார்.

 • தமிழ் ‘மந்திரம்’ வேறு வடமொழி ‘மந்த்ரா’ வேறு. இரண்டும் ஒன்றிற்கொன்று எதிரானது.
 • பண்டைத் தமிழில் 51 எழுத்துக்கள் இருந்தன. அனைத்தும் அதற்குரிய ஆற்றல் பெற்றனவாக ஒளிப் பொருளாக விளங்கின. இதனாலேயே 51 தமிழ் எழுத்துக்களைக்  குறியீடாக 51 சுடராக நடராசர் திருமேனிக்கு திருவாசியாக அமைத்துக் காட்டினர்.

திருவாசகத்தை 51 பகுத¤களாக மணிவாசகர் அமைத்துக் கொண்டதும், இந்த எண்ணின் சிறப்பினாலேயே. இறைவனும் அதைத் தன் கைப்பட எழுதிக் கொண்டான் என்று வரலாறு சொல்கிறது.

ஆகமம்:

ஆகமம் என்ற சொல் தமிழிலும் வடமொழியிலும் தற்சமம் என்ற வகையை சேர்ந்த சொல்.  ஆனால் பொருள் வேறு.

வடமொழியில் வந்தது என்று பொருள். எதிலிருந்து, எங்கிருந்து, எப்போது என்பதற்கு பதில் இல்லை.  (வடசொல் பொருளில் எங்கிருந்து வந்தது, எதிலிருந்து வந்தது, எப்போது வந்தது என்ற கேள்விகளுக்கு அதில் விடையில்லை). எனவே இது குன்றக் கூறியது.

ஆக இதன்  பொருளே தன்னுடையது அல்ல என்பதைக் காட்டிக் கொடுக்கிறது.

ஆகமம்:

தமிழில் ஆ+கமம் – உயிர்களுக்கு நிறைவைக் கொடுப்பது என்ற பொருளில் இன்ப நிறைவைக் குறிக்கிறது.

 • ஐந்தெழுத்தே ஆகமத்தில் பெருமந்திரமாக கொள்ளப்படுகிறது. ஏனெனில் இது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது.  நடராசர் உருவமே ஐந்தெழுத்தால் ஆனது.   ஐந்தெழுத்தில் 5 விதம் உண்டு. ஒன்றில் ஒன்று ஒடுங்குவது, ஒவ்வொன்றும்  ஒவ்வோர் விதமாக வேலை செய்வது.  குரு உபதேசத்தில் சொல்லப்படுவது (சிவதீக்கையில்) ஒவ்வொருவருடைய பக்குவத்திற்கு ஏற்றாற் போல் தக்க குருவினால் மந்திரம் உபதேசிக்கப்படும்.  5 எழுத்தும் 5 பதங்களாகும். இது பெயரல்ல. இது பற்றிய விரிவைத் திருமந்திரமும் விரிவாகக் கூறுகிறது. ‘உண்மை விளக்கம்’ என்ற தமிழ் சாத்திர நூல் விரிவாக பேசுகிறது.

தமிழ் ஆகமம் முடிவில்லாத நிறைவைத் தருவது.  இறை திருவடி ஒன்றுதான் நிறைவு தரும் என்று உணர்ந்து உயிர்களுக்கு இறை இன்பம் என்னும் நிலைத்த நிறைவை எது தருகிறதோ அது ஆகமம் எனப்பட்டது.  ‘கமம் நிறைந்தியலும்’ என்கிறது தொல்காப்பியம்.

மன்னு மாமலை மகேந்திர மதனில்

சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்

– மகேந்திரமலை கபாடபுரம் அருகே இருந்தது – வான்மீகி முனிவர்.

என்பது திருவாசக வரிகள்.  இந்தத் திருவாசகத்தை இறைவன் அந்தணர் வடிவில் வந்து எழுதிக் கொண்டான் என்பது வரலாறு.  இறைவன் ஆகமத்தைத் தமிழ் முனிவர்களுக்கு ஆல நி¦ழல் அமர்ந்து உணர்த்தினான்.  இதனாலேயே தமிழர் வணங்கும் சிவனுக்கு ஆலமர் செல்வன் என்று பெயர்.

கடல் கோளுக்கு முன் இலங்கைக்குத் தெற்கே கபாடபுரத்தருகே மகந்திரமலை இருந்தது என்பதற்கு ‘முக்கடல்புதிர்’ என்ற கடலாராய்ச்சி நூல் சான்று. இதையே காரணாகமம்

விந்த்யாத்ரே தட்சிணே தேசே.

சைவோற்பத்தி ப்ரகீர்த்திதஹ:

என்று சொல்கிறது.

கடற்கோள்களுக்கு இரையான ஆகமத்தை மீண்டும் மீட்டெடுக்க இறைவன் திருமூலரைப் பயன்படுத்தினான் என்பது வரலாறு.  ஐயறிவு உயிர்களாகிய பசுக்களின் துயரத்தைப் போக்கியது போல், ஆறறிவுப் பசுக்களாகிய உயிர்கள் ஆகமத்தைத் தொலைத்துவிட்டுத் துயருறுகின்றன.  எனவே அந்த ஆகமத்தை மீண்டும் தமிழில் வகுத்து உலகத்திற்கு இப்போது பெற்ற உடலிலிருந்தே உதவுக என்பது இறைவன் கட்டளை என திருமூலர் உணர்ந்து உடன் அப்பணியில் இறங்க தமிழாகமம் என்று போற்றப்படும் 3000 திருமந்திரம் முகிழ்த்தது என பெரிய புராணம் கூறுகிறது.

தண்ணிலவார் சடையார் தாம் தந்த ஆகமப் பொருளை

மண்ணின் மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்ப

கண்ணிய அத்திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க

எண்ணிறந்த உணர்வுடையார் ஈசன்அருள் எனவுணர்ந்தார்

திருமந்திரத்தினைத் திருமூலரே ஆகமம் என்கின்றார்.

‘ அந்திமதி புனை அரனடி நாடொறும்

சிந்தைசெய் தாகமம் செப்பலுற்றேனே’

 

‘ என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’

நந்தி பெற்ற மொத்த ஆகமம் 9 என ‘நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே’ என்று கூறுகிறார்.  அந்தப் பட்டியல் இதோ வருகிறது.

பெற்ற நல் ஆகமம் காரணம் காமிகம்

உற்ற நல்வீரம் உயர்சிந்தம் வாதுளம்

மற்றவ் வியாமனம் ஆகும் காலோத்தரம்

துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.

இந்த 9 ஆகமமுமே 28 ஆயிற்று என ஒரு மந்திரம் கூறுகிறது.

ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு

மோகமில் நூலேபூ முப்பேதம் உற்றுடன்

வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன்று

ஆக முடிந்தது அருஞ்சுத்த சைவமே.

ஒவ்வொரு ஆகமமும் கிரியை, யோக, ஞானப் பகுதி என்று முப்பிரிவுகளை உடையது.   ஆக மொத்தம் 27.  இருபத்தேழும் ஒன்று போலக் கூறுவதில்லை. இவற்றின் முரண்பாடுகளை அமைதிபடுத்திய ஆகமம் ஒன்று எழுந்தது.  அது தான் சர்வ ஞான உத்தர ஆகமம்.  அதைச் சேர்க்க 28 என ஆகம எண்ணிக்கை வருகிறது.  இவற்றின் பிரிவு தான் திருமந்திரம். வடமொழியில் ஆகமங்கள் மொழியாக்கம் செய்து வைக்கப் பட்டாலும் அவற்றின் மூலத் தமிழ் வடிவத்தை நிலவுலகில் நிறுத்தியது திருமந்திரமே. பின்னாளில் வந்த சைவ சித்தாந்த நூல்களுக்கெல்லாம் அடிப்படை உண்மைகளைக் கொடுத்தது திருமந்திரம்.   இதில் கூறப்பட்ட ஆறந்தம் வேறெந்த நூலிலும் கூறப்படாதது.  இதைப் பயிற்சி செய்தே வள்ளலார் மிகப் பெரிய பெருநிலை பெற்றார் என்பது செய்தி.  வேறெந்த நூலிலும் காணாத உரிய சக்கரங்களை அளித்த மூலநூல் இதுவாகும்.