வடமொழி

வடமொழி ஆகமங்கள்:

ஆகமங்களில் சரியை, கிரியை யோகம், ஞானம் என்கின்ற 4 பகுதிகளும் உண்டு.  ஆனால் வடமொழி ஆகமங்களில் கிரியைப் பகுதியைத் தவிர ஏனைய பகுதிகள் இல்லை என்பது பலரும் அறியாத செய்தி.  நம்முடைய தவக்குறை ஆகும்.

  • கிரியைகள் எல்லாம் ஞானம் விளங்குவதற்கு அடிப்படை என்பர். ஆனால் ஞானப் பகுதியே இல்லையென்றால் அது மிகப் பெரிய அறிவிழப்பு அல்லவா. இவ்வாறான நிலையில் நமக்கு ஞானம் ஒன்றைப் பற்றி மட்டுமே கூறும் சர்வ ஞானோத்தர ஆகமம் கிடைத்துள்ளது.
  • இந்த சர்வ ஞானோத்தர ஆகமத்தின் கருத்து முழுமையும் சிவஞான பாடியத்தில் சிவஞான முனிவர் 6ஆம் சூத்திர உரையில் தொகுத்து உரைக்கிறார்.
  • ஆகமங்களிலேயே கலை சிறந்த ஆகமம் இதுவேயாகும். பிற ஆகமங்களில் எந்த ஒரு சிக்கல் எழுந்தாலும் அதைத் தீர்க்கக் கூடியத் திறன் இதில் உள்ளது.  இவ்வாகமத்தை முருகனுக்கு சீகண்ட பரமேசுவரர் கூறியதாகும்.  இதில் கூறப்பட்டவைகள் யாவும் இதற்கு முன் யாருக்கும் கூறப்படவில்லை என்றும், இதில் கூறப்பட்ட முத்தி முறையே மேலானது என்று மும்முறை சத்தியம் செய்து இந்து ஆகமம் தொடங்குவதால் இது ஆகமங்களிலேயே தலை சிறந்த ஆகமமாக கருதப்படுகிறது.

 

சைவசித்தாந்தம் சிவ ஆவணங்களின் ஞானப் பிழிவே:

ஆகமத்தில் கிரியைக்கு பல உரைகள் வந்தது போல ஆகமத்தின் ஞானப்பகுதிக்கு உரைகள் வடமொழியில் ஒன்றும் இல்லாததே இதற்குச் சான்று.  மேலும் ஆரியர்கள் தமிழர்களைப் பார்த்து தூர இருந்தே தெரிந்த சில விஷயங்களைக் கொண்டு யாகம் வளர்த்தது போன்று.  வழிபாட்டுக்குரிய பூஜை முறைகளை கிரியைகளை வேண்டு மட்டும் எடுத்துக் கொண்டதால் வந்த விளைவு, அடிப்படையை விட்டு விட்டனர்.

  • ஆகமம் என்றால் ஞானம் என்ற பொருளும் உண்டு. வடமொழியில் கிடைக்கின்ற ஆகம நூல்களில் ஞானப் பகுதி இல்லை என்றால் அதை வடமொழியாக்கம் செய்து வைத்தவர்கள் ஞானப்பகுதியைப் பற்றி பொருட்படுத்தவில்லை என்பது புரிகிறது.

இந்தப் பின்னணியில் நமக்குத் தமிழில் கிடைத்த சித்தாந்த சாத்திரங்கள் இந்த ஞானம் தமிழர்களிடையே பரவலாக இருந்தது என்பதற்கு அழியாச் சான்றாக உள்ளது.

  • சித்தாந்த சாத்திரங்கள் மொத்தம் 14. இது முற்றிலும் தமிழர்க்கும், தமிழ் நாட்டிற்கும் மட்டுமே தொடர்புடையவை என்பதைக் காட்டுகிகிறது.
  • சித்தாந்த சாத்திரங்கள் அனைத்தும் முப்பொருள் உண்மையை வலியுறுத்துவன. பதி, பசு, பாசம் என்பனவே முப்பொருள்கள்.  பாசத்தை நீக்கி பசுவான உயிர் எப்படி பதியான இறைவனிடம் ஒன்றுவது என்பதைப் பற்றி இந்நூல்கள் விரிவாக விளம்புகின்றன.

ஆக இவையாவும் சிவாகமங்களின் ஞானக்கூறு ஆகும்.  வடமொழியில் இல்லாத இந்த ஞானக்கூறு தமிழில் இருப்பதும் அதிலும் மிக விரிவாக இருப்பதும் தமிழர்கட்குப் பெருமை அளிப்பது என்பதில் ஐயமில்லை.

 

 

தமிழ் ஆகமங்கள் வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்ட காலம்:

 

பல்லவர்கள் அருவா வடகலை நாட்டிலிருந்து தமிழ் நாட்டில் நுழைந்தார்களோ அப்போதே வடமொழியும் அரசு  செல்வாக்குடன் நுழைந்தது.  அவர்கள் காலத்தில் காஞ்சிபுரத்தில் வடமொழியாளர்கள் பலர் குடியேற்றப்பட்டனர்.  பல்லவர்கள் பரத்துவாச கோத்திரத்தைச் சேர்ந்த ஆரிய பரம்பரையினர்.  இதைக் கல்வெட்டுகளே சான்று பட உறுதியாகக் கூறுகின்றன.

அரசன் மொழி ஆரியமொழி என்பதால் அவனது மொழியில் வழிபாடுகளை மாற்ற சிவாச்சாரியார்கள் முனைந்தார்கள்.  வடமொழிக்கு எழுத்து வடிவம் இல்லை.  அட்சரம் என்ற சொல்லிற்கு ஒலி வடிவம் என்பது தான் பொருள்.  இதனால் சிவாச்சாரியார்கள்  வடமொழியில் தமிழ் ஆகமங்களை மொழி பெயர்த்தார்கள்.  புதிதாக கிரந்தலிப¤ தோன்றியது.  அதில் பல தமிழ் எழுத்துக்கள் சிற்சில மாறுதல்கள் பெற்று இடம் பெற்றன.  இது பல்லவ காலத்தில் உருவானதால் பல்லவ கிரந்தம் என சொல்லப்பட்டது.

வடமொழி யாகமங்கள் காஷ்மீர் வரை பரவ ஏறத்தாழ 150ஆண்டுகள் ஆயின. காஷ்மீரிலிருந்த பண்டிதர் சத்தியோ ஜோதி சிவாச்சாரியார் வியாக்கியானம் (பேருரை) 9ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதினார்.  அகோர சிவாச்சாரியார் 12ஆம் நூற்றாண்டில் பத்ததி எழுதினார்.