வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி 3

முருகா

வெளிச்சத்தின் வீச்சில் . . .

முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

வேள்வி” – (3)


“வேள்வி” – (2) பதிவில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி செய்த வேள்வி தமிழ்வேதப்படி நடத்தப்பட்டது என்பதைச் சான்றுகளுடன் நிறுவினோம். இனி இந்த வேள்வி அந்தப் பாண்டியனால் எக்காலத்தில் நடத்தப்பட்டது என்பது சிந்தனைக்குரியது.

      நல்ல வேளையாக புறநானூற்றிலேயே இதற்குரிய தகவல் கிடைக்கிறது. புறநானூற்று 9-ஆம் பாடல் இத்தகவலை அளிக்கிறது. இப்பாடல் மேற்கண்ட பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மீது பாடப்பட்டது; பாடிய புலவர் நெட்டிமையார். பாடலின் இறுதி 4 வரிகள் இவ்வாறு வருகின்றன:

       எங்கோ வாழிய குடுமி தங்கோச்

       செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த

       முந்நீர் விழவின் நெடியோன்

       நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே!      (புறம்; 9)

      இவ்வரிகளால் புலவர் இப்பாண்டியனை பஃறுளி ஆற்று மணலின் எண்ணிக்கைக்கும் அதிக ஆண்டுகள் வாழ்க என்று வாழ்த்துகிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இங்கே கூறப்பட்ட பஃறுளி ஆறு இன்றில்லை. இது நெடும்பழங் காலத்தில் கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் அதன் தென்கோடியில் ஓடியது என்று தமிழ் இலக்கியங்களாலும், வரலாற்று ஆசிரியர்களாலும் கூறப்படுகிறது.

    இதைக் கூறும் தமிழ் இலக்கியச் சான்றுகள் மற்றும் இது பற்றி ஆய்ந்து முடிவு கூறிய மேலை நாட்டுக் கடலியல் நிபுணர்களும் வெளியிட்ட செய்திகளும், நூல்களும் பல்கிப் பெருகிய அளவில் உள்ளதனால் அவற்றை எல்லாம் இங்கே எடுத்துக் காட்டுவது மற்றொன்று விரித்தலாகி விடும் என்பதால் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டி அமையலாம்.

       இலக்கியச் சான்று:

        இறையனார் அகப்பொருள் இயல் உரை:

     “தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச்சங்கம் என மூவகைப் பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள். அவருள் தலைச்சங்கம் இருந்தார் அகத்தியனாரும், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றம் எறிந்த குமரவேளும், முரஞ்சியூர் முடிநாக ராயரும், நிதியின் கிழவனும் என இத் தொடக்கத்தார் . . . அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தார் என்ப. அவர்களைச் சங்கம் இரீஇயினார் காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவி அரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப.”

      மேற்கண்டது இறையனார் என்று குறிப்பிடப்படும் தற்கால மதுரை. ஆலவாய்ச் சொக்கநாதரால் இயற்றப் பெற்று பொருளதிகாரத்தின் சாரமாக (இது தமிழுக்கே உரிய தனிச் சிறப்புடைய இலக்கணக் கூறு) இறைவன் அகத்திணையை விளக்கி உலகிற்கு வழங்கிய நூல். இது சொக்கநாதரின் பீடத்தில் அர்ச்சகரால் கண்டெடுக்கப்பட்டு கடைச்சங்கத் தலைமைப் புலவரான நக்கீரரால் எழுதப்பட்ட உரையின் பகுதி.

      இதன் மூலம் நாம் பெறும் செய்திகளாவன: தமிழ் மொழியைப் பழங்கால பாண்டியர்கள் சங்கம் வைத்து ஆராய்ந்தனர். அந்தச் சங்கம் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று காலத்தால் மூவகைப்பட்டன. தலைச்சங்கம் என்ற முதன் முதலில் தோன்றிய சங்கம் 4440 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கி வந்திருக்கின்றது. தோன்றிய ஒரு சங்கம் இவ்வளவு நீண்ட காலமாகத் தொடர்ந்து இயங்கி வந்தது என்பதே உலக சங்கங்கள் தொடர்பான வரலாற்றிலேயே வியப்பிலும் வியப்பாக விளங்குவது.

        இவ்வளவு நீண்ட ஆண்டுகள் என்பதனைப் பார்க்கும் போது இது ஒரு பாண்டியனால் மட்டுமே இயக்கப்பட்டு வந்திருக்க முடியாது என்பதும் தெளிவு. எனவே இதை விளக்குவதாக மேற்கண்ட உரை, அச்சங்கம் இயங்கிய காலம் ஒரு பாண்டியனது காலம் அல்ல; தொடர்ந்து பரம்பரையாக வந்த 89 பாண்டிய மன்னர்களின் காலம் அதனுள் அடங்கி இருக்கிறது என்றும் கூறுகிறது.

        காய்சின வழுதி என்றால் சினத்தைக் காய்ந்தவன் என்று பொருள். அதாவது நெருங்காதே என்று கோபத்தைக் கோபித்தவனாம். கடுங்கோன் என்றால் அறத்தை, நெறியைக் கடுமையாகப் பின்பற்றிய அரசன் என்று பொருள். அதாவது தற்காலத்தில் ஒருவரைப் பற்றிக் கூறும் போது அவர் ரொம்பக் கண்டிப்பானவர் என்கிறோமே அந்தப் பொருளில் என்க. ஆகவே இப்படியெல்லாம் நற்குணம் பொருந்திய 89 பாண்டியர்களால் தலைச் சங்கம் 4440 ஆண்டுகள் தொடர்ந்து இயங்க முடிந்தது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

       அடுத்த கேள்வி என்னவென்றால் தலைச்சங்கம் அப்புறம் ஏன் தொடரவில்லை? காரணம், குமரிக் கண்டம் என்கிற தென்பால் தமிழ்நிலம் மிகப் பெரும் கடல்கோளால் பெரும்பகுதி கடலுள் மூழ்கடிக்கப்பட்டது. இந்தப் பெருங்கடல்கோளைப் பற்றி விவிலியம் (Bible) உள்பட உலகின் எல்லாப் பகுதி தொன்மங்களிலும் கூறப்படுகிறது. காரணம், இது உலகப் பேரழிவு; ஒரு கண்டமே அதன் முக்கால்வாசி நிலப்பரப்பை இழந்தது. எனவே அப்பகுதியில் அமைந்த தலைச்சங்கம் தொடர முடியவில்லை.

       இந்தத் தலைச்சங்கம் இயங்கிய இடம் மதுரை என்றும் அது மேற்சொன்ன பெருங்கடல்கோளால் அழிந்துபட்டது என்பதால், இந்த மதுரை தற்போது இந்தியாவின் தெற்குப் பக்கத்தில் உள்ள மதுரை அன்று என்பது தெளிவாகிறது. காரணம், அந்த மதுரை தான் அழிந்துவிட்டதே! எனவே அழிந்த அந்த மதுரையைச் சங்க இலக்கியங்கள் தென்மதுரை என்று கூறுகின்றன. இப்போதுள்ள மதுரை சென்னைவாசிகட்குத் தென்மதுரை என்றாலும், அழிந்த மதுரையே இப்போதுள்ள மதுரைக்கும் தென்மதுரை!

        அடுத்து, மதுரை எனப்படும் தென்மதுரை கடல்கோளில் அழிந்திருக்கலாம். ஆனால் பஃறுளி ஆறும் அந்தக் கடல்கோளில் அழிந்து போயிற்றா என்று ஒரு கேள்வி எழலாம் அல்லவா? ஆம்! அந்தக் கடல்கோளில் மதுரையுடன் அங்கு ஓடிய பஃறுளி ஆறும் அழிந்தது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. உரிய சிலப்பதிகார வரிகள் வருமாறு:

      வடிவேல் எறிந்த வான்பகை பொறாது

      பஃறுளி யாறுடன் பன்மலை அடுக்கத்துக்

      குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

                          சிலப்பதிகாரம்; காடுகாண் காதை: 18-20 வரி

       அழிந்து போன பஃறுளி ஆற்றை தலைச்சங்கம் ஒன்றோடு மட்டும் தான் தொடர்பு படுத்தி சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ஒன்றேனும் பஃறுளியாற்றை இடைச்சங்கத்தினோடு அல்லது கடைச்சங்கத்தினோடு தொடர்பு படுத்திக் கூறவேயில்லை. எனவே திண்ணமாக பஃறுளி ஆறு தலைச்சங்கத்தில் தான் கடல் கொண்டு அழிந்து போயிருக்கிறது. தலைச்சங்கம் 4440 ஆண்டுகள் இயங்கியது என்பது மட்டும் தான் இலக்கியங்களால் அறிய முடிகிறது. ஆனால் தலைச்சங்கம் எதிலிருந்து தொடங்கி எதன்வரை அதன் இயக்க காலமாகிய 4440 ஆண்டுகளைக் கடந்தது என்ற தகவல் இல்லை. காரணம், இப்போது ஒரு குறியீட்டு வரையறையாக கிறித்து பிறப்பைக் கொண்டு காலங்களைக் கி.பி., கி.மு. என்று கணிப்பதற்கு வைத்துள்ளது போல ஒரு குறியீட்டு வரையறை எல்லாம் அக்காலத்தில் இல்லை. எனவே அதைச் சரியாகக் கணிக்க முடியவில்லை.

கடலியல் விஞ்ஞானச் சான்று

      அடுத்து, தலைச்சங்கம் கடல்கோளில் மூழ்கிய காலத்தைக் கணக்கிடவே முடியாது என்பதும் இல்லை. காரணம், இன்றைய விஞ்ஞான வளர்ச்சி அதைச் சாத்தியமாக்கி இருக்கிறது. இதை விஞ்ஞான ரீதியாக ஆய்ந்து முடிவு செய்ய மேலைநாட்டுக் கடலியல் நிபுணர்கள் பல கால இடைவெளிகளில் முயற்சிகளை மேற்கொண்டனர். அதில் வெற்றி பெற்றவர் இரஷிய கடலியல் விஞ்ஞானியான அலெக்ஸாந்தர் கோந்த்ரதேவ் என்பவர்.

        இவர் ஒரு கடலியல் விஞ்ஞானிகள் குழுவுடன் இந்துமாக் கடலடியை ஆய்ந்தார். காரணம், உலகில் முதலில் மனிதன் தோன்றியதாக மானிடவியல் விஞ்ஞானிகள் கருதிய குமரிக்கண்டம் மூழ்கியது இந்துமாக்கடல் பகுதியில் தான். எனவே இக்கடல் பகுதியில் ஆழ்கடல் ஆய்வு செய்தது அந்தக் குழு.

        அக்குழு கடலடியில் சில கட்டடங்களையும் பொருட்களையும் கண்டது. அவற்றை மேலே கொண்டு வந்து இயன்ற பொருட்களைக் கால ஆய்வுக்கு உட்படுத்தியது. மிக நவீன விஞ்ஞானக் கால ஆய்வுச் சோதனையான சி-14 என்னும் ரேடியோ கார்பன் சோதனைக்குக் கண்டெடுத்த பொருட்களை உட்படுத்திய போது பெருமளவிற்குத் துல்லியமாக அவை கிறித்து பிறப்பதற்கு 18000 ஆண்டுகட்கு முன்னவை என்று கண்டுபிடித்தார்கள். இந்தத் துல்லிய ஆய்வை ஏனைய இத்துறை சார்ந்த உலக கடலியல் விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொண்டனர்.

       இந்த ஆய்வு பற்றி ‘முக்கடல் புதிர்’ (Riddles of the three Ocean) என்ற தலைப்பில் அலெக்ஸாந்தர் கோந்த்ரதேவ் மிக விரிவாக ஆராய்ந்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளார். அதில் இவ்வாய்வை மேற்கொண்ட போது என்னென்ன தொன்மங்கள் மற்றும் இலக்கியங்களின் தகவல்கள் ஒத்திடப் பெற்றன என்பதைக் குறிக்கும் போது இறையனார் களவியல் உரை என்கிற நக்கீரரின் தமிழ் இலக்கியமும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

       எனவே குமரிக் கண்டத்தின் தென்கோடியில் தென்மதுரையில் இயங்கி வந்த தலைச்சங்கமும் அச்சங்கம் இயங்கிய காலத்து பஃறுளியாறும் உலக முதல் பெருங்கடல்கோளில் அழிந்த காலம் கி.மு. 18000 என்று விஞ்ஞான ரீதியாக அறுதியிடலாம்.

       பாண்டியன் முதுகுடுமியோ பஃறுளி ஆறு குமரிக்கண்டத்தில் ஓடிக் கொண்டிருந்த காலத்தில் இருந்தவன் என்பது அவன் பஃறுளி ஆற்று மணலின் எண்ணிக்கையை விட ஆண்டு பலவாக வாழ்க என்று புலவர் நெட்டிமையார் பாடுவதிலிருந்து திண்ணமாக அறிய முடிகிறது. இது கி.மு.18000 என்பதால் கிறித்து பிறந்து கழிந்துள்ள தற்போதைய 2000 ஆண்டுகளையும் கூட்ட தலைச்சங்கம், பஃறுளியாறு, அதைப் பாடிய புலவர் நெட்டிமையார், அவரால் பாடப்பட்ட முதுகுடுமிப் பாண்டியன் அனைவரும் இன்றைக்கு ஏறத்தாழ 20000 ஆண்டுகட்கு முன்னவர் என்பது தெளிவு.

     ஆகவே இன்றைக்கு 20000 ஆண்டுகட்கு முன்னர் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்கின்ற ஒரு பாண்டியன் தமிழ் வேதப்படி வேள்விகளைத் தமிழால் செய்திருக்கிறான். இந்த அடிப்படையில் தமிழ் வேள்வியின் வயது 20000 ஆண்டுகட்கு மேல் என்று அறுதியிட்டு சிந்தனையை மேலே செலுத்துவோம்.

                                     . . . தொடரும்